Sunday, December 28, 2008

494.புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை -TPV13

திருப்பாவை பதிமூன்றாம் பாடல்

ஏமாற்ற நினைப்பதை விடுத்து படுத்துறங்குவதை விட்டு எழுந்து வா!

அடாணா ராகம் , மிச்ரசாபு தாளம்

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்று
புள்ளும்சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக்கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோரெம்பாவாய்.


பறவை உருக்கொண்டு வந்த பகாசுரனின் வாயைக்கிழித்துக் கொன்ற கண்ணன் மற்றும், இலங்கேஸ்வரனின் பத்துத்தலைகளையும் கிள்ளியெறிந்து அவனை வதம் செய்த ராமனுடைய புகழைப் போற்றிப்பாடி, ஊரிலுள்ள அனைத்துப் பெண்களும் நோன்பு நோற்க, குறித்த இடத்தில் வந்து சேர்ந்துவிட்டனர். (சுக்கிரன்) சுக்கிரக்கிரகம் உச்சிக்கு வந்து, வியாழன் (குரு கிரகம்) மறைந்து விட்டது. இரையைத் தேடி செல்லும் காலைப்பறவைகளின் இறக்கைகள் உண்டாக்கும் சப்தம் உன் காதுகளில் விழவில்லையா?

வண்டுகள் மொய்க்கும் அழகிய தாமரை மலர் போன்ற கண்களையுடையவளே! உள்ளமும் உடலும் குளிர, எங்களுடன் சேர்ந்து குளிர்ந்த நீரில் அமிழ்ந்து நீராடாமல் இப்படி படுக்கையில் கிடக்கலாமோ, அழகிய பெண்ணே! இந்நன்னாளில் தூங்குவது போல பாவனை செய்வதை விடுத்து, எங்களுடன் கலந்து நோன்புக்கு வருவாயாக!


இப்பாசுரத்தில் துயிலெழுப்பப்படும் பெண், கண்ணனின் திவ்ய தரிசனத்தை ஒரு தடவை பெற்ற பாக்கியசாலி. அது குறித்த திவ்ய சிந்தனையில் மூழ்கியிருப்பதால், உறங்குவது போல தோற்றமளிக்கிறாள் அந்த அழகிய கண்களுக்குச் சொந்தக்காரி. இதை போதரிக்கண்ணினாய் என்ற பிரயோகத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்! போதரி = போது + அரி = தாமரைமலர் + வண்டு, வண்டு என்பது கருவிழியைக் குறிக்கிறது. அது தெரிவதால், அப்பெண் உறங்கவில்லை என்பது தெளிவு, ஒருவித மோன நிலையில் இருக்கிறாள், கிருஷ்ணானுபவத்தை மனதில் அசை போட்டவாறு !

முந்தைய பாசுரத்தில், ராமபிரானின் கீர்த்தி (சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியானை!) பாடப்பட்டது. இதனால், கல்யாண குணநலத்தில் சிறந்தவன் ராமனா அல்லது கண்ணனா என்று இரண்டு குழுக்களாகப் பிரிந்து கோபியர் வாக்குவாதம் செய்கின்றனர். ராமனும் கண்ணனும் ஸ்ரீமன் நாராயணனே என்று சமரசம் ஏற்படவே, கோதை நாச்சியார் இப்பாசுரத்தில் "(புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்)" என்று இருவரையுமே போற்றிப் பாடி, கபடத் துயிலில் உள்ளவளை எழுப்புகிறாள்.

"புள்ளும் சிலம்பின காண்" என்று கோதையார் ஆறாம் பாசுரத்தில் சொல்லியதை மறுபடியும் இங்கு பாட என்னக் காரணம் ? அப்போது, பறவைகள் துயிலெழுந்து கூவுவதைப் பற்றிச் சொல்கிறார் ஆண்டாள். இப்போது, பறவைகள் கூட்டிலிருந்து புறப்பட்டு இரை தேடும் இடங்களுக்கு பறந்து செல்லும்போது இறக்கைகள் படபடத்து ஏற்படும் சப்தத்தைப் பற்றிப் பாடி, இன்னும் அதிக சமயமாகி விட்டதை உணர்த்துகிறாள் !

"வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்று" - ஆண்டாள் இப்பூமியில் வாழ்ந்ததாகக் கணிக்கப்பட்ட காலத்தில் சுக்ரன் (VENUS) ஒரு பக்கம் தோன்ற, வியாழன் (JUPITER) நேரெதிர் பக்கம் மறைந்த ஒரு அரிதான வானவியல் நிகழ்வு நடந்துள்ளதை வானவியல் குறிப்புகள் பறைசாற்றுகின்றன! இத்தனைக்கும், டெலஸ்கோப் கண்டுபிடிக்கப்படாத காலம் அது, ஆண்டாள் ஒரு பதினாலு வயது நிரம்பிய ஒரு பெண்! அவள் ஒரு அதிசய வானவியல் நிகழ்வு குறித்து துல்லியமாக, ஒரு வாக்கியத்தில் எளிதாகக் கூறி விட்டுச் சென்று விட்டாள் !


ஆச்சார்யனிடம் ஞான உபதேசத்திற்குச் செல்லாமல், மற்ற சீடர்களிடமிருந்து விலகியிருக்கும் ஒரு சீடனுக்கு அறிவுரை கூறும் நோக்கில் இப்பாசுரம் அமைந்துள்ளதாக அபினவ தேசிகன் சுவாமிகள் உள்ளுரை கூறுவார். இவன் ஆச்சார்ய உபதேசம் கிடைக்கப்பெற்ற பாக்கியவான்!

கற்றுணர்ந்ததை தங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு (கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ), அந்தவொரு சீடனை மற்றவர் வேண்டுகின்றனர். ஆச்சார்யனிடத்தில் செல்வதற்கு முன்பாக ஒரு அடிப்படைத் தகுதியைப் பெற வேண்டியே இந்த விண்ணப்பமாம்.

'புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைப் பாடி' என்பது பத்து இந்திரியங்களையும், மனத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஆச்சார்யனைப் போற்றுகிறது.

'பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம்புக்கார்' என்பது (ஒருவனைத் தவிர) மற்ற சீடர்களெல்லாம் ஆச்சார்யனை அடைவதற்கு தயாராகி விட்டதை குறிக்கிறது.

"வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்று" என்பது ஞானம் புலரும் மற்றும் அஞ்ஞான இருள் விலகும் சுப வேளையை குறிப்பில் உணர்த்துவதாம்.

"குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே" என்பது பகவத் அனுபவத்தில் திளைத்து மகிழ முன் வைக்கப்படும் அழைப்பை உள்ளர்த்தமாக கொண்டது.

"பள்ளிக்கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்" எனும்போது, கைவல்யமே போதும் என்று இருக்கும் அந்த ஒற்றைச் சீடனை, ஆச்சார்ய உபதேசத்திற்கு வந்து மோட்ச சித்தியின் உபாயத்தை அறிந்து கொள்ளுமாறு மற்ற சீடர்கள் அழைக்கிறார்கள் என்பது உள்ளுரையாம். ஆச்சார்ய சம்பந்தம் கிடைக்கும் நாள் என்பதால் "நன்னாள்" என்று கொண்டாடப்படுகிறது.

இப்பாசுரம் ஆண்டாள் நாச்சியாருக்கு இளையவரான தொண்டரடிப்பொடி ஆழ்வாரை துயிலெழுப்புகிறது. இவ்வாழ்வார் பெருமாளுக்கு மலர்க் கைங்கர்யம் செய்வதில் மிகுந்த ஆசை கொண்டவர் என்பதால், "போதரிக் கண்ணினாய்" என்ற பதம் இவருக்குப் பொருந்துகிறது !

மற்ற காரணங்களை பின்னர் இப்பதிவில் சேர்த்து விடுகிறேன்.

எ.அ.பாலா

4 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

டெஸ்ட்!

உயிரோடை said...

புள்ளும் சிலம்பின காண் இதை இங்கே மீண்டும் ஏன் பாட‌ வேண்டும் என்று ஒவ்வொரு முறை ப‌டிக்கும் போதும் நினைத்திருக்கின்றேன். இன்று விள‌ங்க‌ப் பெற்றேன். ந‌ன்றி. போதரிக்கண்ணினாய்,வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்று விள‌ங்க‌ளும், பாசுர‌ சிற‌ப்பாக‌ சொல்லி இருக்கும் அனைத்தும் அருமை.

enRenRum-anbudan.BALA said...

மின்னல்,
தினம் வந்து வாசிப்பதற்கும், வாழ்த்துக்கும் நன்றி!

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி பாலா. இந்தப் பாசுரம் எப்படி தொண்டரடிப்பொடியாழ்வாரைக் குறிக்கிறது என்ற மற்ற காரணங்களைச் சேர்த்த பின்னர் சொல்லுங்கள்.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails